Saturday 26 April 2014

VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில்- மூன்றாம் பரிசு

VGK  அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில்- மூன்றாம் பரிசு

மதிப்பிற்குரிய திரு  வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதைப் போட்டியில்
"VGK 13 - வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ ! புதிய கட்சி ’மூ.பொ.போ.மு.க.’ உதயம் !!
கதையின் விமர்சனத்திற்கு எனக்கு மூன்றாம் பரிசு கிடைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!


வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும், தெரிவு செய்த நடுவர் ஐயாவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ ! புதிய கட்சி ’மூ.பொ.போ.மு.க.’ உதயம் கதைக்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13.html

பரிசுபெற்றதற்கான அறிவிப்புக்கு இணைப்பு:


என்னுடைய விமர்சனம் இதோ:

வழுவட்டை’ என்ற தலைப்பே இது ஒரு நகைச்சுவை கலந்த கதை என்ற எண்ணத்தை ஏற்படுத்தி வாசகனை உள்ளே ஈர்க்கிறது.  ஒரு சராசரி அலுவலகம் எப்படி இருக்கும் என்பதை கண்முன் நிறுதுவதைப் போல ஆரம்பக் காட்சி அமைப்பு இருக்கிறது. எழுச்சிக்கு எதிர்ப்பதமான வார்த்தைப் பிரயோகமே வழுவட்டை என்பது ஆரம்பத்திலேயே தெரியப் படுத்தப்படுகிறது.  ஆரம்பத்தில் வழுவட்டை சீனிவாசனே கதாநாயகனாக காட்டப்படுகிறார்.  வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு சுருட்டு, மகாத்மா காந்திக்கு கைத்தடி – மூக்குக் கண்ணாடி என்பதைப்போல் மூக்குப்பொடி டப்பா வ.வ. ஸ்ரீனிவாசனுக்கு அடையாளமாகக் காட்டப்படுகிறது.

மனிதன் பழக்கத்திற்கு அடிமை!  அந்த அடிமைப் பழக்கதிற்கு ஆளானவர்களெல்லாம் ஒரு வட்டமாக இருப்பது வழக்கமான ஒன்றுதான்.  அந்த வகையில் அனுபவித்துப் பொடி போடும் வ வ ஸ்ரீனிவாசனுக்கு ஒரு ‘பொடி’ வட்டம் இருப்பது நன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளது.  பணமாகக் கேட்டால் செலவு செய்ய தயங்குபவர்கள்கூட  கட்டிங் வாங்கித்தரவோ அல்லது சிகரெட் வாங்கித்தரவோ தயங்குவதில்லை அதனை செலவாகவும் நினைப்பதில்ல. அந்த வகையில் இங்கு மூக்குப்பொடி!  அதிலும்  தம்பி, நீ ஒரு பொடிப்பையன்.   பொடியைப்பற்றி உனக்குத்தெரிந்திருக்க நியாயம் இல்லை.   ஓஸியிலே பொடி வாங்கி நாசியிலே போட்டால் கிடைக்கும் இன்பமே இன்பம்;  அதெல்லாம் அனுபவிச்சவனுக்குத்தான் தெரியும்” என்ற வரிகள் வ வ ஸ்ரீ விடுப்பில் சென்றதும் ‘ஓசிப் பொடியர்’கள் படும்பாட்டினை நகைச்சுவையுடன் சித்தரிக்கிறது.

”இந்த தமிழ்நாடு எலெக்‌ஷன் முடியற வரைக்கும் எனக்கு ரெஸ்டே கிடையாது தம்பி.   அடிக்கடி லீவு போடுவேன்.  234 தொகுதிகளுக்கும் போய்ப் பலபேரை சந்திக்கணும். ஆற்றவேண்டிய கட்சிப்பணிகள் நிறையவே இருக்குப்பா”  என்ற வரிகள்    வ வ ஸ்ரீயின் பட்டாவையும் வெளிப்படுத்துகிறது. பொடி போடுபவர்களின் மேனரிஸம் கதையில் மிக அருமையாக சித்தரிக்கப் பட்டுள்ளது. 

அதனை  “இடது கை விரல் நுனியில் பொடிடப்பாவை வைத்துக்கொண்டு, வலதுகை ஆள்காட்டி விரலால் அதன் தலையில், மிருதங்க வித்வான் போல தட்டியவாறே, என்னை ஒரு விஷமப்பார்வை பார்த்து மீண்டும் பேசலானார்” என்ற வரிகளும்,   “இந்த மூக்குப்பொடி போடும் ஆசாமிகள் சற்று தள்ளி நின்று பொடி போட்டாலே நமக்குத்தும்மல் வந்துவிடும் போது, அவர்களால் எப்படிப் பொடியை கணிசமான அளவில் விரல்களால் எடுத்துக்கொண்டு, **வேட்டுக்குழாயில் கந்தகம் அடைப்பது போல**, மூக்கினுள் அடைத்து, சர்ரென்று ஒரே இழுப்பாக இழுத்து, தும்மாமல் இருக்க முடிகிறது என்று எனக்கு அடிக்கடி ஒரு சந்தேகம் வருவதுண்டு” என்ற வரிகளும் ரசித்துச்சிரிக்கும்படியாக சித்தரிக்கின்றன.

40 வருடங்களுக்கு மேலாக ஒரு அலுவலகத்தில் சூப்பரின்டென்டென்ட் ஆக இருந்துவரும் ஒருவருக்கு எப்படி ஒரு அலட்சியம், பயமற்ற, மேலதிகாரிகளை மதிக்காத போக்கு இருக்கும் என்று அருமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதனை
“ஏற்கனவே இங்கிருந்து டிரான்ஸ்பரில் போன மேனேஜர்பயல் V V என்றால் புதிதாக வந்துள்ள இவன் S V V யாக இருப்பான் போலிருக்கு” (V.V= வழுவட்டை;  S.V.V = சூப்பர் வழுவட்டை)”  என்ற வரிகளும், “புதிதாக டிரான்ஸ்ஃபர் ஆகி வந்துள்ள இந்த மேனேஜர்பயல் என் சின்னப்பையனை விட வயதில் ரொம்பவும் சின்னவன் தெரியுமோ; அவன் வயசைப்போல ஒண்ணரை மடங்கு இந்த நிறுவனத்தில் நான் சர்வீஸே போட்டாச்சு தெரியுமோ; இந்த ஆபீஸில் சீனியர் ஆபீஸ் சூப்பிரண்டெண்டான நான், என் 41  வருஷ சர்வீஸில் இவனைப்போல எவ்வளவு மேனேஜர்பயலுகளைப் பார்த்திருப்பேன் தெரியுமோ?” என்றார் வ.வ.ஸ்ரீ.” என்ற வரிகளும் மற்றும் ”அவன் கிடக்கிறான், நீ எதற்குமே கவலையே படாதே; அவனால் உனக்கு ஏதாவது பிரச்சனையென்றால் என்னிடம் வந்து சொல்லு.    RETIRE ஆக இன்னும் மூணு மாதங்களே உள்ளன எனக்கு.  அதற்குள், I will teach him a Lesson”  [நான் அவனுக்கொரு பாடம் கற்பிக்கிறேன்]   என்றார்” எனும் வரிகளும் கண்முன்பாக நிறுத்துகின்றன.

“தம்பி, பொடிட்டின் நிறைய பொடியை அடைத்தாலும் அந்தப்பொடிட்டின் தும்மல் போட்டுப் பார்த்திருக்கிறாயா நீ...”  என்றார். “ எனும் வரிகள் “A snuff box never sneezes” என்ற ஆங்கிலப் பழமொழியை நினைவுறுத்துகின்றன.

 பல இடங்களிலும் பொடிபோடுபவரின் மேனரிஸம் குறித்து எழுதப்பட்டிருக்கும் வரிகள் செவாலியே சிவாஜிகணேசன் அவர்களது கேரக்டர் ஸ்டடிசெய்து நடிக்கும் தன்மைக்கு கதாசிரியர் எந்த அளவிலும் குறைந்தவரில்லை என்பதனைத் தெளிவுபடுத்துகின்றது.(சிவாஜி கணேசன் அவர்கள் காஞ்சிப் பெரியவரின் நடை உடை பாவனைகளை அடியொற்றி திருவருட்செல்வர் படத்தில் நடித்திருப்பார் என்று கூறப்படுவதுண்டு.)
          
வ வ ஸ்ரீ அவர்களின் ஆண்டு அனுபவிக்கும் தன்மையை “இது எங்கப்பரம்பரை வழக்கமப்பா, நான் என்ன செய்வது?; எங்க தாத்தா (அப்பாவோட அப்பா) தவறிப்போகும் போது அவருக்கு வயது 108.  அவர் தன் 12 ஆவது வயதிலிருந்து பொடிபோடப் பழகியவர்ன்னு கேள்வி.  என் அப்பாவும் பொடி போடுவார்.   அவர் என் தாத்தாபோல செஞ்சுரி போடாவிட்டாலும் பொடி போட்டே 99 வயதுக்கு மேல் ஒரு மூணு மாதமும் வாழ்ந்தவர்” என்ற வரிகள் மூலமாக அறிய முடிகிறது.

          ஒரு திரைப்படத்தில் திரு. கவுண்டமணி அவர்கள் தன்னை நாடி வரும் நோயாளியை “பொடி, குடி, லேடி எதுவுமில்லாமல் நீயெல்லாம் எதுக்குடா நூறு வயசு வாழணும்?” என்று கலாய்ப்பது இங்கு ஞாபகம் வருகிறது.

அன்றைய அலுவலக நேரம் இத்துடன் முடிந்து விட்டதால்,  நாங்கள் ஆற்ற வேண்டிய அரும் பணியை இவ்விதமாகப் பேசிப்பேசியே (Group Discussions) கழித்து விட்ட நாங்களும் வீட்டுக்குப் புறப்பட ஆயத்தமானோம்.” என்ற வரிகள் மூலமாக அலுவலகங்களில் எவ்வாறு காலவிரயம் ஆகிறது என்பதனை நகைச்சுவைக்கு இடையேயும் கோடிட்டுக் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அப்பாக்களின் கெட்ட வழக்கங்களும் எப்படி பிள்ளைகளுக்கு ஒட்டிக் கொள்கிறது என்பதும், மக்களை அந்த பழக்கங்களுக்கு அடிமைப் படுத்த எவ்வாறு வியாபாரிகள் காரணமாக இருக்கின்றனர் என்பதனை “பொடி போடும் என் அப்பாவுக்கு நான் தான் அந்தக்காலத்தில் பொடி வாங்கி வருவேன்.  அவருக்கு திருச்சி மலைவாசலில் தேரடி பஜாரில் மேற்குப்பார்த்த முதல் கடையில் தான் ’டி.ஏ.எஸ்.  ரத்தினம் பட்டணம் பொடி’ வாங்கி வரணும். அங்கு எப்போதும் கமகமவென்று ஒரே பொடிமணமாக இருக்கும்.  என்ற வரிகளும், அதை விட வேடிக்கை என்னவென்றால், பொடிப்பயல்கள் முதல் பெரியவர்கள் வரை, நடுநடுவே ஓஸிப்பொட்டிக்கு கைவிரலை நீட்டுபவர்களுக்கெல்லாம், இலவசப்பொடி வழங்கப்பட்டு வந்ததே அந்தக்கடையின் தனிச்சிறப்பு” மற்றும்  அந்தக் காலத்தில் அதுபோல இலவசப்பொடியை நுகர ஆரம்பித்த நுகர்வோர்களில் 12 வயதே ஆன நானும் ஒருவன்” என்ற வரிகளும் அறியத்தருகின்றன.

எப்போதுமே சீட்டில் இருப்பவர் போல ஏதோ ஒரு ஃபைலை மேஜை மீது விரித்து வைத்து, அதன் மேல் ஒரு பேப்பர் வெயிட்டையும், மூக்குக்கண்ணாடியையும், மூக்குப்பொடி டப்பாவையும் வைத்து விட்டுச் சென்று விடுவார். பார்ப்பவர்களுக்கு அவர் இங்கு எங்கோ தான் பாத் ரூம் போய் இருப்பார் என்று நினைத்துக்கொள்ள, அது அவர் கையாளும் ஒரு டெக்னிக் என்பது, நான் மட்டுமே நாளடைவில் தெரிந்து கொண்டது. “ எனும் வரிகள் ஒரு அலுவலகத்தில் எப்படியெல்லாம் எஸ்கேப் ஆகிறார்கள் என்பதனை படம் போட்டுக்காட்டுவதாக அமைந்துள்ளது.
பொண்டாட்டி இல்லாமல்கூட இருக்கலாம் ஆனால் பொடியில்லாது 
இருக்க முடியாது என்று பொடிக்கு அடிமையான நிலைமையை 
வ வ ஸ்ரீ கூறியிருப்பதும் அதற்கு அவர் கூறும் காரணங்களும் 

குடிகாரன் குடிக்கான காரணத்தைக் கூறுவதுபோலத்தான் இருக்கிறது.

      ”CONGRATULATIONS”  

என்று தொடங்கி “In fact இப்போ என் சீட்டில் என்ன பெரிய வேலை நான் பார்த்து வருவதாக நீ பயப்படுகிறாய்.  சும்மா வருகிறவன் போகிறவனுடன் அரட்டை அடித்து வருகிறேன்.   இந்த கம்ப்யூட்டர் வந்த பிறகு எல்லா வேலைகளையும் உன்னைப்போல இளைஞர்கள் தானே பார்க்கிறீர்கள்!  நான் தான் இந்தக் கம்ப்யூட்டர் கன்றாவியெல்லாம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று ஒதிங்கி ஒரு எட்டு வருஷத்துக்கு மேல் இருக்குமே” என்றும் “இதெல்லாம் நானும் இந்த ஆபீஸில் ஏதோ வேலை செய்கிறேன் என்று ஒரு பாவ்லா காட்ட மட்டும் தான் வைத்திருக்கிறேன்”   என்று உள்ளதை உள்ளபடிச் சொல்லி, எனக்கு ஒரு உற்சாகம் அளித்தார்” என்றும் ரகசியத்தை கூறுவதுபோல் வேலையை முழுதும் உடனிருப்பவன் தலையிலேயே கட்டிவிட்டு தப்பித்துக்கொள்ளும் தன்மையை காணத்தருகிறார்.

          பொடியை நிறுத்த மருத்துவர் அறிவுறுத்தியும்கூட முடியாது திணறி மறுபடியும் போட அரம்பித்துவிடுகிறார். வெளிநாடு செல்லும்போதுகூட எப்படியாவது திருட்டுத்தனமாக எடுத்துச் சென்று பொடிபோடும் நிலைக்குத்தள்ளப்படுகிறார். “பொடிகூட விற்காத பொடலங்காய் ஷாப்பிங் “ என்று சாடுகிற நிலைக்குப் போய்விடுகிறார்.

“மூக்குப் பொடி போடுவோர் முன்னேற்றக் கழகம்”  ஆரம்பிக்கும் அளவுக்கு மனநிலை பாதித்துப்போய் மீண்டும் குணமடைகிறார். அப்பொழுதும்கூட தேர்தல் சின்னமாக பொடிடப்பாதான்! ஏனென்றால் அறிஞர் அண்ணா பொடிபோடும் பழக்கமுள்ளவர் என்பதோடு அவரின் அரசியல்வாரிசாக நினைத்தும் கொள்கிறார்.

தற்காலிக அட்டாக்கிலிருந்து வெளியாகி பணியில் சேர்ந்து ஓய்வும் பெறுகிறார். ஓய்வு பெறும் போதும் பொடி டப்பா, பொடி கொடுத்தே விடை பெறுகிறார்.

          அலுவலகத்தின் அவலமான நிகழ்வுகளை நகைச்சுவையோடு கலந்து கொட்டுவைத்திருப்பதனைப் பாராட்டலாம்.  பழக்கத்திற்கு அடிமையாகி கடைசியில் லேசான மனநோய் பாதிப்பிற்கும் உள்ளானதை கோடிட்டு எந்தப்பழக்கதிற்கும் அடிமைப்படவேணடாமென எல்லோரையும் அறிவுறுத்துகிறார். முன்னிலை, படர்க்கை அதிகம் பயன்படுத்தாது தன்மையிலேயெ பெரும்பாலான கதைப்பகுதியைக் கொண்டு சென்றிருப்பது நம்மைக் கதையுடன் ஒன்றவைத்துவிடுகிறது.  கூகிள் டிரான்ஸ்லேட்டர் மூலமாக தேடினால் வழுவட்டை என்பதற்கு ஆங்கிலத்தில் gliding joint என்று பொருள் தருகிறது. சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யும் நெடுங்கதை!

          மொத்தத்தில் கார நெடி தூக்கலான காமெடி கதை!

8 comments:

  1. பாராட்டுகள்! மேலும் பல பரிசுகள் வெல்ல வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும் என் சார்பிலும் தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    இந்தப் போட்டியில் தங்களின் முதல் வெற்றியை தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் நன்றிகள்.

    மேலும் மேலும் தொடர்ந்து இதே போட்டிகளில் கலந்துகொண்டு, மேலும் மேலும் பல்வேறு பரிசுகள் வென்றிட என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    அன்புள்ள VGK

    ReplyDelete
  3. ”CONGRATULATIONS”

    பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  4. போட்டியில் மூன்றாம் பரிசு வென்றமைக்கு பாராட்டுகள். மேலும் பல பரிசுகள் உங்களை வந்தடையட்டும்...

    ReplyDelete